தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை அவரது நண்பர்களே கொன்று புதைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்நல்லாத்துரை ஏரிக்கரையில் கடந்த 27 ஆம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸாருக்கு, கொலை செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இந்த நிலையில் ரத்தத் தூளிகள் சிந்தியபடி ஒருவரை ஏரிக்கரையின் முட்புதர் அருகே இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் காணப்பட்டன.
இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடிய பொலிசார், தோண்டப்பட்ட குழியில் பாதி மணல் மூடப்பட்ட நிலையில் ஒருவர் புதைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
அந்த உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதினர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் மகேஷ்குமார் எனவும் வயது 20 எனவும் தெரியவந்தது.
மட்டுமின்றி மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்த போலீஸார் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலும் விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.
நண்பர்களே மகேஷ்குமாரைக் கொலை செய்து ஏரிக்கரையில் குழிதோண்டி புதைத்ததாக தெரியவந்தது.
வேலை ஏதும் இல்லாத மகேஷ்குமார் அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. அதே பெண்ணை மகேஷ்குமாரின் நண்பரும் காதலித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமாரின் நண்பர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ்குமாரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி அந்த நண்பர் ஏரிக்கரையில் மது அருந்தலாம் என மகேஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த அவரிடம், அந்த பெண்ணை மறக்க வேண்டும் எனவும், காதலை கைவிட வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் மகேஷ்குமாரை அவரின் நண்பர்கள் அடித்துக் கொலை செய்து சடலத்தை ஏரிக்கரையில் புதைக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிலர் அதைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தற்போது இந்த கொலை வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர்.
இருப்பினும், மகேஷ்குமாரின் கொலையானது காதல் விவகாரம் என்பதை போலீஸாரால் உறுதி செய்யமுடியவில்லை.
சரணடைந்துள்ள 5 இளைஞர்களை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.