இங்கிலாந்தில் தனது நிர்வாண புகைப்படம் வெளியானதால் இளைஞர் ஒருவர் தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இளைஞர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

லிவர்பூல் பகுதியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவரான ஜோயல் க்ரோக்கெட் தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கபட்டார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஜோயலின் தாயார் ரூத், தமது மகனை கும்பல் ஒன்று தொடர்ந்து அச்சுறுத்தியும் மிரட்டியும் வந்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமது மகனின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் அந்த விஷமிகளால் கசிய விடப்பட்டது எனவும்,

அந்த சம்பவத்திற்கு பின்னர் ஜோயல் மன உளைச்சலில் இருந்தார் எனவும், தமது மகனை மரணத்திற்கு தூண்டியது அந்த கும்பல் என ரூத் கண்கலங்கியுள்ளார்.

வீடியோ விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜோயல், அந்த விளையாட்டுகளை வாங்குவதாலையே கிண்டலுக்கும் கேலிக்கும் இரையாகி தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் மூன்று நாட்களுக்கு முன்னர் ஜோயல் மிகவும் மனப் பிரயாசையுடன் காணப்பட்டதாகவும்,

வழக்கத்திற்கு மாறாக மிகவும் சாந்தமாகவும், அதிக நேரம் தூக்கத்தில் செலவிட்டதாகவும் ரூத் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், தம்மிடம் மிக அதிக அளவு பணம் கேட்டதாகவும், தாம் அந்த அளவுக்கு தொகையை வழங்க மறுத்ததாகவும் ரூத் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியான அவனது நிர்வாணப் புகைப்படங்களே வினையாக மாறியது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் 18 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் போலிசார் அவரை விடுவித்துள்ளனர்.