பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜசேகர் (61) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
தொண்ணூறுகளில் பெரிய திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்றுவரை சின்னத்திரையில் நடித்து வந்தவர் ராஜசேகர்.
இவர் இயக்குனரும் கூட. பாரதிராஜா இயக்கியத்தில் சூப்பர் ஹிட்டான நிழல்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
கதாநாயகன், தந்தை, நகைச்சுவை, குணச்சித்திரம் ஆகிய வேடங்களில் கனகச்சிதமாக நடிக்கும் திறனுடையவர் ராஜசேகர். சின்னத்திரையில் உச்சம் தொட்ட சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியின் தந்தையாக நடித்து இன்றைய தலைமுறையினருக்கும் தன்னை அறிமுகம் செய்துகொண்டவர்.
சமீபத்தில் உடல்நல குறைவால் சென்னை போரூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜசேகர் இன்று மாரடைப்பால் காலமானார். இதனால் தமிழ் சினிமா ஒரு நல்ல கலைஞனை இழந்துள்ளது. இவரது இறப்பு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு, பறைவைகள் பலவிதம் ஆகிய படங்களில் இவர் இயக்குனராக பணியாற்றியுள்ளார். தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கையில் அயராது உழைத்து கண்ணியத்துடன் வாழ்ந்த இவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.