ஐதராபாத்தில் பிளாட்பாரத்தில் கிடந்த பெட்டியை திறந்தபோது மர்மப் பொருள் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ராஜேந்திரா நகர் பகுதியில் பி.வி. நரசிம்மராவ் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது.

Tamil Girls Chat Room

இந்த மேம்பால சாலையில் 279வது தூண் எதிரே லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. இதன் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் சிறிய மர்ம பெட்டி ஒன்று கிடந்துள்ளது.

இதனை அவ்வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அலி(35) என்பவர் எடுத்து திறக்க முயன்றார். அப்போது அந்த பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அலியின் இரண்டு கைகளும் துண்டித்த நிலையில், பலத்த ரத்த காயங்களுடன் சாலையில் மயங்கி விழுந்தார். பலத்த வெடிச்சத்தம் கேட்டதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர்.

தொடர்ந்து ஒருசிலர் உடனடியாக வந்து அலியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அலி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஐதராபாத் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இதே பகுதியில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடைபெற்ற நிலையில், ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்த வெடிகுண்டு வைக்கப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மர்ம பொருள் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், `அப்பகுதியில் கிடந்த சிறிய பெட்டியை அலி திறக்க முயன்றபோது வெடித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அந்த பெட்டியில் ஏதோ கெமிக்கல் இருந்ததும், அது வெடித்துள்ளதும் தெரியவந்துள்ளது’’ என்றனர்.