வறுமையால் கருக்கலைப்பிற்கு அனுமதி கோரிய பெண்ணின் கணவருக்கு தற்காலிக அரசுப் பணி வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராக்கு. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,” எனக்கு திருமணம் ஆகி 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இதனால், கடந்த 17.4.2014-ல் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. உடனே நான் மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பரிசோதித்த மருத்துவர்கள் நான் கர்ப்பமடைந்துள்ளதாக கூறினர்.

image

தற்போது எனக்கு 35 வயதாகும் நிலையில் பிரசவம் என்பது கடினமானது. இது மனரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கணவர் கூலி வேலை பார்க்கும் நிலையில் குழந்தைகளின் படிப்பிற்கே அதிகம் செலவாகிறது. தற்போது என்னாலும் எந்த வேலையும் பார்க்க முடியவில்லை.

தற்போது 13 வாரம் கருவுற்றுள்ளேன். எனவே அரசு செலவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து எனது கருவை கலைக்க அனுமதியும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது விருதுநகர் ஆட்சியர் தரப்பில், மனுதாரர் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.