கொரோனா வைரஸ் விழிப்புணர்வில்லாமல் பொது இடங்களில் சுற்றி திரியும் நபர்களுக்கு கன்னியாகுமாரி போலீசார் தேர்வு நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 – ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள் இருக்கவும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருந்தபோதும் மக்கள் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பொது இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இப்படி சுற்றி திரியும் மக்களுக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார், தோப்புக்கரணம், திருக்குறள் ஒப்புவித்தல் உட்பட பல நூதன தண்டனைகளை அளித்து வருகின்றனர்.

Tamil Girls Chat Room

இந்நிலையில் பொது இடங்களில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா தேர்வு நடத்தி வருகிறது கன்னியாகுமாரி மாவட்ட போலீஸ். பைக்கில் சாலையில் சுற்றி திரிபவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு தேர்வு படிவத்தைக் கொடுக்கிறார்கள். கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது? கொரோனா வைரசின் காதலியின் பெயர் என்ன? உட்பட மொத்தம் பத்து கேள்விகள் படிவத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரு கேள்விக்கு தவறாக பதில் எழுதினால் ஒருவருக்கு 10 தோப்புக்கரணமும், கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழியும் போலீசார் எடுக்க வைக்கின்றனர்.

மேலும், வெளிநாட்டிலிருந்து கன்னியாகுமாரி மாவட்டம் வந்த 3600 நபர்கள் அவர்களின் வீட்டிலேயே கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , அவர்கள் வெளியே நடமாடினால் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமை வார்டில் அடைக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.