அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச உயிரிழப்பாகும். அங்கு முன்னதாக கொரோனாவால் 3,008 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது இறப்பு எண்ணிக்கை 3,873 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது அங்கு 1,88,578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் 1096 பேர் உயிரிழந்துள்ளதால் நகரத்துக்கு வெளியே உள்ள மருத்துவமனை மார்ச்சுவரிகளில் இறந்தவர்களின் உடல்களை வைக்க இடமின்றி குளிர்பதன ட்ரக்குகளில் வைக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் உள்ள இடுகாடுகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் நியூயார்க் இறுதிச் சடங்கு இயக்குநர்கள் கூட்டமைப்பு அதிகாரி மைகெ லனோட்டஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க மருத்துவ நிபுணர்களான ஆண்டனி ஃபாசி, டெபோரா பர்க்ஸ் ஆகியோர் அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் கணக்கிட்டால் பலி எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ள டொனால்ட் ட்ரம்ப், “இது மிகவும் வலிநிறைந்த, மிக மிக வலிநிறைந்த 2 வாரக் காலக்கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.