ஐக்கிய அரபு அமீரகத்தில் ஊரடங்கு நேரத்தின்போது அத்தியாவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் , இந்திய மதிப்பில் 76 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 814 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்துள்ளது. வைரஸ் அறிகுறிகளுடன் யாராவது வெளியே சுற்றித்திரிந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், இந்திய மதிப்பில் 76 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிந்தும், அவர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால் 3 ஆண்டுகள் தண்டனையும் சுமார் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் சவுதி அரேபியா அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் மெக்காவில் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதிமாக சவுதி அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் அதிக அளவில் கூடினால், கொரோனா எளிதில் பரவக்கூடும் என்பதால், கடந்த மாதம் உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது. இந்நிலையில், ஹஜ் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டின் அமைச்சர் முகமது பென்டன் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், அதனை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முகமது பென்டன் கேட்டுக் கொண்டுள்ளார்