தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 27 பேருக்கும், திருவிக நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் தலா 14 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 12 பேருக்கும், தேனாம்பேட்டையில் 10 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தண்டையார் பேட்டையில் 7 பேருக்கும், வளசரவாக்கம் மற்றும் பெருங்குடியில் தலா 4 பேருக்கும், திருவொற்றியூர், மாதவரம், அடையாறில் தலா 3 பேருக்கும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சென்னையில் உள்ள 22 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது. இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடியிருப்புகள் உள்ளன.எனவே, இப்பகுதியில் உள்ள மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.