பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மூலம் போதைக்கு அடிமையான பலர் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறும் சிகிச்சைக்கு முன்வந்திருக்கிறார்கள்.

பஞ்சாபில் அரசு மற்றும் தனியார் சிகிச்சை மையங்களில் புதிதாக 15,754 பேர் சேரந்துள்ளனர்.
போதை மீட்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4.15 லட்சமாக உயர்ந்துள்ளது.

பஞ்சாபில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கினால் போதைப் பொருட்கள் சப்ளை தடைபட்டு, போதைக்கு அடிமையான பலர் அரசின் சிகிச்சை மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் புள்ளிவிவரப்படி பஞ்சாப் மாநிலத்தில் 7.2 லட்சம் பேர் போதைப பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் போதைப் பொருட்கள் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் போதைக்கு அடிமையான பலர் அரசின் போதைப் பழக்கத்திலிருந்து மீட்கும் சிகிச்சை மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் போதை பழக்கத்தைக் கைவிடுவதற்கான சிகிச்சையைப் பெற வந்துகொண்டிருக்கின்றனர்.

198 அரசு மருத்துவமனைகள் மற்றும் 106 தனியார் சிகிச்சை மையங்களில் புதிதாக 15,754 பேர் சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர். 8,091 பேர் அரசு மையங்களிலும் 7,663 பேர் தனியார் மையங்களிலும் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் போதை மீட்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4.15 லட்சமாக உயர்ந்துள்ளது.

அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் பி.டி. கார்க், “தினமும் 15 பேர் போதை மீட்பு சிகிச்சைக்கா வருகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கிவிடுகிறோம். முதலில், இரண்டு வாரங்களுக்கு மருந்துகளை வழங்குகிறோம். இவற்றை அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே சாப்பிட்டுவரலாம்..” என்கிறார்.

பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சிந்து, “ஊரடங்கு உத்தரவு மூலம் போதைக்கு அடிமையான பலர் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறும் சிகிச்சைக்கு முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.