தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மளிகை, பால், மருந்தகங்கள், காய்கறி, இறைச்சி கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயங்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி சரீர இடைவெளியுடன் மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல் சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வந்து செல்லக்கூடிய 75 சந்தைகளில் 60 சந்தைகள் சாலைகள், பேருந்து நிலையங்கள், காலி மனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ரெடியா? ஊரடங்கில் இப்படியொரு வித்தியாசமான போட்டி!
இங்கு சரீர இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறின்றி அத்தியாவசிய சேவைகளை பெறும் வகையில் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.

இதையொட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை மாநகர் முழுவதும் 5,000 மூன்று சக்கர சைக்கிள்கள், 2,000 சிறிய மோட்டார் வாகனங்களின் மூலம் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் துவங்கப்பட உள்ளன.

இதில் வரும் வணிகர்கள் கையுறை, முகக் கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு விற்பனை செய்வர். இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும்.