அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை தொடர்ந்து அமெரிக்க கடற்படை தலைவர் தாமஸ் மோட்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசாக விளங்கும் அமெரிக்காவை, கண்களுக்கு புலப்படாத நுண்கிருமி கொரோனா வாட்டி வதைத்து வருகிறது. கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளையும், அதிகமான தொற்றுகளையும் சந்தித்த நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில், அந்த நாட்டின் விமானம் தாங்கி போர் கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த கப்பல் குவாம் தீவில் உள்ள கடற்படை தளத்தில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலின் தலைமை அதிகாரி குரோஷியர் ஊடகத்துக்கு எழுதிய கடிதம் வாயிலாகத்தான் மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்தது.

எனவே பகிரங்கமாக உதவிகேட்டு, பீதி ஏற்படுத்தியதாக கூறி அவரை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி பதவி நீக்கம் செய்தார். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து, மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக கப்பலின் தலைமை அதிகாரியை பதவி நீக்கம் செய்தது தவறானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. மேலும், அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி பதவி விலக வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், தாம்ஸ் மோட்லி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ராணுவ மந்திரி மார்க் எஸ்பரிடம் வழங்கினார். இது குறித்து மார்க் எஸ்பர் கூறுகையில், “ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலோடு தாமஸ் மோட்லியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன். அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜிம் மெக்பெர்சன் புதிய கடற்படை தலைவராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறார்” என கூறினார்.