கோயம்புத்தூரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மூவருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துடன் வேறு இரண்டு மருந்துகளும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தை உள்பட ஐந்து பேருக்கு மூன்று மருந்துகள் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில்வே மருந்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த பெண் மருத்துவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவருக்கு தாய்லாந்து நபரிடம் இருந்து தொற்று ஏற்பட்டு இருந்தது. இவரிடம் இருந்து இவரது 10 மாதக் குழந்தை, அவரது தாய், பெண் உதவியாளர் என நான்கு பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஐந்து பேர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கு கொடுத்த மருந்து குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ” கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின், oseltamivir, azithromycin ஆகிய மூன்று மருந்துகள் கொடுக்கப்பட்டன. பெண் மருத்துவர், அவரது பத்து மாத ஆண் குழந்தை, அவரது பெண் உதவியாளர், திருப்பூரில் இருந்து ஒரு தொழிலதிபர், ஸ்பெயினில் இருந்து வந்த பெண் ஒருவர் ஆகியோருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. இந்த மூன்று மருந்தில் ஒன்று மட்டும் குழந்தைக்கு கொடுக்கப்படவில்லை.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து கடந்த திங்கள் கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வீட்டில் இவர்கள் அனைவரும் தனிமையில் 28 நாட்களுக்கு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி நோயாளிகளுக்கும் இந்த மருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. பரிசோதனை முடிவு வராதவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்படுவதில்லை” என்றார்.

மலேரியாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தும், ஹெச்1என்1 நோய்க்கு oseltamivir மருந்தும், பல்வேறு பாக்டீரியா மற்றும் தொற்று நோய்களுக்கு azithromycin மருந்தும் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.