தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்காலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பல இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.மழை நின்றபின்னரும் சாலைகளில் பரவிக் கிடந்த ஆலங்கட்டிகளால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதியிலும் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.