தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த முக்கிய அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனா மூலம் சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உயிரிழப்பும் குறைந்தபாடில்லை. இந்தியாவிலும் வேகமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு, சோதனை, சிகிச்சை, உயிரிழப்பு, நிவாரணம், தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய நகர்வுகளை இந்த இணைப்பில் காணலாம்.

*கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிகிச்சை பெற்று வந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில் அவர் மூலம அவரது குடும்பத்தினருக்கும் பரவியது. 20 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர்கள் பூரண நலமடைந்த நிலையில் இன்று வீடு திரும்ப உள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று மூவர் வீடு திரும்பவுள்ளது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

*ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையை தொடங்கினார்.

*கரூர் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆட்டோ மூலம் அனைத்து வார்டுகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள மினி பேருந்து நிலையத்திலும் தற்காலிக காய்கறி சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*சேலம் சதாசிவபுரத்தில் 144 தடையுத்தரவை மீறி இயங்கிய தனியார் ஆலையில் விஷ வாயு தாக்கி இரு தொழிலாள்கள் உயிரிழந்துள்ளனர். போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*ஈரோட்டைச் சேர்ந்த நபர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது அவர் குணமடைந்துள்ளார். குணமடைந்தது உறுதி செய்யப்பட்ட பின் அவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

*ராணிபேட்டையைச் சேர்ந்த இளைஞர் துபாயிலிருந்து நாடு திரும்பினார். அவர் 22ஆம் தேதி வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். தொடர் சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்துள்ளார். இருமுறை அவருக்கு சோதனை செய்ததில் நோய் தொற்று இல்லை என தெரியவந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

*தமிழ்நாட்டில் இதுவரை 7267 பேரின் ரத்த மாதிரிகளே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

*கொரோனாவால் தமிழ்நாட்டில் தற்போதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.