கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அத்தியாவசியப் பொருள்களை வாங்கும்போது மக்கள் சரீர இடைவெளியைக் கடைபிடிக்கினரா என கண்காணிக்கப்படுகிறது. வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் வீடுகளைச் சுற்றி ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ள வீடுகளில் தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உள்பட 24பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தவர் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத்துறை காவல்துறையினர் மூலம் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 7இடங்கள் சீல் வைக்கப்பட்டு 52ஆயிரம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. ஆயிரத்து 723 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.