நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி 4ஆவது முறையாக நாட்டு மக்களிடையே நாளை காலை உரையாற்றவுள்ளார்

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மாதம் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் கைதட்டி ஒலி எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மாதம் 24ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக நாட்டு மக்களிடையே ஏப்ரல் 3ஆம் தேதி பேசிய பேசிய பிரதமர், “ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து உங்கள் வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச் அல்லது அகல் விளக்கை 9 நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்றார். கொரோனா பாதிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருவதாலும், மே, ஜூன் மாதங்களில்தான் கொரோனா தொற்று பெருமளவில் இந்தியாவில் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருவதாலும் இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்து வருகிறது. மேலும், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஏப்ரல் 11ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகின. அதேசமயம், ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன.

இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி 4ஆவது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு பகுதிகளை வகைப்படுத்தி சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.