எனக்கு இனி பணம் தேவையில்லை, இதுவரை சம்பாதித்ததை வைத்து பயிரிட்டு ஏழைகளுக்கு கொடுக்க போகிறேன் இதை கொரோனா எனக்கு கற்று கொடுத்த பாடம் என மனம் திறந்து பேசியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

உலகம் முழுவதையும் நிலைகுலைய வைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதில் வடமாநிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வசதி படைத்தவர் முதல் ஏழை எளிய மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் எவ்வித பாகுபாடும் இன்றி அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என சொல்லலாம்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பலரும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்டா, முகநூலில் நேரலையில் வந்து கலந்துரையாடுகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன், அஸ்வின் இருவரும் இன்ஸ்டாகிராமில் உரையாடல் நிகழ்த்தினர். அதில் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சொன்ன விஷயங்கள் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

ஹர்பஜன் சிங் கூறியதாவது, ‘இந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு ஒரு சில பாடங்களை கற்றுக்கொடுக்கவே கடவுள் அனுப்பியுள்ளார், இதுவரை நாம் அனைவரும் பணம் பணம் என வீட்டில் தங்க முடியாமல் அதன் பின்னே ஓடினோம். இப்போது வாசலை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். பணம் தான் தேவை என பேராசையுடன் வாழ்ந்தோம். ஆனால் இந்த பணத்தால் எதையும் பெற முடியாது, வெறும் பணத்தை மட்டும் வைத்து கொரோனாவை அழிக்க முடியாது.

இதுவரை நான் சம்பாதித்த பணம், இனிமேல் நான் வாழப்போகும் வாழ்க்கைக்கு மிக அதிகம், அதை செலவு செய்ய என்னால் முடியாது. மனிதர்களுக்கு இவ்வளவு பணமும் தேவையில்லை. இந்த கொரோனா வைரஸ் எனக்கு எளிமையாக வாழ கற்றுக்கொடுத்துள்ளது.

நாம் அனைவருக்கும் தேவை அன்பும், அரவணைப்பும் தான் என இந்த சூழல் எனக்கு உணர்த்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்பாடு முடிந்ததும், பஞ்சாபிற்கு சென்று நிறைய நிலங்கள் வாங்கி, காய்கறி, கோதுமை பயிரிட்டு விவசாயியாக மாறவிருக்கிறேன். அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கும் கோவில்களுக்கும் இலவசமாக வழங்குவேன். இதில் தான் நான் மனம் நிம்மதி அடைய முடியும்’ என தன் மனதிலிருந்து உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.