விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு நாட்டையே அதிரவைத்துள்ளது. எங்கே ஓடுறது என்றே எங்களுக்கு தெரியவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. இதையடுத்து இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் சாலையில் என்ன நடக்கிறது என பார்த்து கொண்டிருந்தவர்கள் திடீரென மயங்கி விழுந்தார்கள். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் மரணம் அடைந்தனர்.

இதனிடையே விபத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, ”அதிகாலையில் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரிய புகை வெளியில் வந்தது. அத்துடன் அந்த இடமே தெரியாத அளவிற்கு கடும் புகைமண்டலமாக மாறியது. எங்களுக்கு எங்கே ஓடுவது என தெரியவில்லை. எங்கள் கண்ணனுக்கு முன்பே பலர் மயங்கி விழுந்தார்கள்”, என வேதனையுடன் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.