cinema

பொன்னியின் செல்வன் படத்தின் தாக்கம் : சரிந்த நாவல் விற்பனை | Impact of Ponniyin Selvan: Declining novel sales

[ad_1]

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் தாக்கம் : சரிந்த நாவல் விற்பனை

24 ஜன, 2024 – 11:54 IST

எழுத்தின் அளவு:


பொன்னியின்-செல்வனின் தாக்கம்:-குறைந்த-நாவல்-விற்பனை

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டு முதல் 1954ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வாரமும் தொடராக வெளிவந்து அன்றைய வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் 5 புத்தகங்கள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. அந்த நாவல் வெளிவந்து சுமார் 70 ஆண்டுகள் ஆனாலும் புதிய வாசகர்கள் அந்த நாவலை தவறாமல் வாங்கிப் படித்து வந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாவல் தான் அதிக அளவில் விற்பனையாகும் நாவலாக இருந்து வந்தது. தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலை வாங்கி வாசிக்கும் அளவிற்கு அதன் பெருமை இருந்தது.

இயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இரண்டு பாகங்களாக படமாக்கினார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். முதல் பாகத்தை 2022ம் ஆண்டு, இரண்டாம் பாகத்தை 2023ம் ஆண்டு வெளியிட்டனர். முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது, 500 கோடி வசூலையும் கடந்தது. ஆனால், இரண்டாம் பாகத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. நாவலில் இருந்த பல விஷயங்களை இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் மாற்றிவிட்டார் என நாவலின் தீவிர ரசிகர்கள் குற்றம் சாட்டினர். சில கதாபாத்திரங்களின் முடிவையும் மணிரத்னம் மாற்றியிருந்தார். இதுதான் படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் போனதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் தாக்கம் இந்த வருடம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் எதிரொலித்துள்ளது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் நாட்டுடமையாக்கப்பட்ட நாவல் என்பதால் பலரும் அந்த நாவலை விதவிதமான தரத்தில் புத்தகமாக்கி விற்று வந்தார்கள். ரூ.500 முதல் ரூ.3000 வரையிலும் தங்கள் வசதிக்கேற்றபடி வாங்கி வந்தார்கள் வாசகர்கள். ஆனால், இந்த ஆண்டு முடிந்த கண்காட்சியில் நாவலின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது என்கிறார்கள்.

கண்காட்சியில் சுமார் 1000 அரங்கில் 500 அரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் விற்பனைக்கு வைக்கப்பட்டதாம். ஒரு அரங்கில் ஒரு புத்தகம் அல்லது சில புத்தகங்கள் மட்டுமே விற்பனையானதாம். புதிய வாசகர்களிடம் இந்த நாவலை வாங்கிப் படிக்கும் ஆர்வம் சுத்தமாகக் குறைந்து போனது விற்பனையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

புத்தகக் கண்காட்சி இல்லாத போது கூட ஒரு விற்பனையாளர் மாதத்திற்கு 200 பிரதிகள் விற்று வந்த நிலையில் தற்போது ஒரு பிரதி விற்பதே பெரும்பாடாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் பிரதி விற்கப்பட்டு வந்த நிலையில் இப்போது 5000 பிரதிகள் விற்பனையானால் பெரிய விஷயம் என்கிறார் ஒரு பதிப்பாளர். இந்த வருடம் பலரும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அச்சிட்டு விற்பனைக்குத் தயாராக வைத்திருந்தனர். ஆனால், அவை விற்கப்படாத சூழலில் அந்த நாவலின் மூலம் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வந்த பின்பும் கூட நாவல் விற்பனை நன்றாகவே இருந்தது. ஆனால், இரண்டாம் பாகம் வந்த பின்பு நாவலின் விற்பனை அடியோடு சரிந்து விட்டது என்று சொல்கிறார். படத்தின் தாக்கம், அது பற்றிய ஞாபகங்கள் மக்கள் மனதில் இருந்து அடியோடு மறைந்த பின்புதான் மீண்டும் மக்களிடம் இந்த நாவலை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வர வாய்ப்புள்ளது என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *